Home » கொரோனாவிலிருந்து உலகம் பாதுகாக்கப்பட மே முழுவதும் திருச்செபமாலை சொல்லுங்கள் – யாழ். ஆயர்
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

கொரோனாவிலிருந்து உலகம் பாதுகாக்கப்பட மே முழுவதும் திருச்செபமாலை சொல்லுங்கள் – யாழ். ஆயர்

கொரோனாவிலிருந்து உலகம் பாதுகாக்கப்பட மே முழுவதும் திருச்செபமாலை சொல்லுங்கள் – யாழ். ஆயர்
அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் என்ற இறை வார்த்தையை மனதிருத்தி கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டி திருச்செபமாலை மாதமான மே மாதம் முழுவதிலும் யாழ். மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் மரியன்னை யாத்திரைத் தலங்கள் அனைத்திலும் திருச்செபமாலை சொல்லுங்கள்.
இதனைவிட யாழ் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க மக்கள் அனைவரும் மே மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வீடுகளில் குடும்ப செபமாலை சொல்லி கொறோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட அன்னையிடம் இரந்து வேண்டுங்கள் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது இனம் – மதம் – நிறம் – மொழி – கலாசராம் – கண்டம் என்ற எந்த வேறுபாடுமின்றி ஒரு கொடிய உலக யுத்தம்போல் சத்தமின்றி இன்று உலக உயிர்களை அழிக்கின்ற கொரோனா நோய் உலக மக்கள் எல்லாருடைய இயல்பு வாழ்வையும் பாதித்து எல்லாரையும் பயத்திலும் பதட்டத்திலும் இனி என்ன நடக்குமோ என்ற ஏக்க உணர்விலும் வாழ வைத்துள்ளது.
அரச தலைவர்களோ சுகாதார உயர் அதிகாரிகளோ ஆன்மீகத் தவைர்களோ அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் எதுவுமே செய்ய முடியாத ஒருநிலை இதுவாகும். இறைவன் மட்டுமே இந்த இக்கட்டான வேளையில் உதவிக் கரம் நீட்ட முடியும். தம் அளவு கடந்த இறை இரக்கத்தைக் காட்ட முடியும். மனித உயிர்களைப் பாதுகாக்க முடியும். இக்கொடிய நோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
இந்த இக்கட்டான இவ்வேளையில் துணை புரிய கத்தோலிக்க மக்களுக்கு திருச்செபமாலை ஒன்றே ஒரு பெரிய ஆயுதமாகும். வரலாற்றில் பல தடவைகளில் நம்பிக்கையோடு திருச்செபமாலை சொல்லப்பட்டு நடக்க முடியாது என எண்ணப்பட்ட பல விடயங்கள் புதுமைகளாக நடந்துள்ளன என்பது உலகறிந்த உண்மையாகும்.
எனவேதான் திருத்தந்தை பிரான்சீஸ் அவர்களும் உலகெங்கும் பரவியுள்ள கோவிட் தொற்றை முடிவுக்கு வர மே மாதம் முழுவதும் அன்னையின் உலகத் திருத்தலங்களில் திருச்செபமாலை சொல்லும்படி அழைப்பு விடுத்துள்ளார். –
திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது – என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய திருச்செபமாலைச் செப முயற்சியை மே மாதம் முதல் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்து மே மாதம் 31ஆம் திகதி நிறைவு செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொற்று அனைத்து மக்களுக்குமான ஆபத்தானது என்கின்ற வகையில் மற்றைய மதங்களைச் சேர்ந்த அன்பர்களும் இக்காலத்தில் தமக்கேயுரிய நாட்களில் தமக்கேயுரிய இறைவேண்;டலில் ஈடுபட்டு இக்கொடி நோயில் இருந்து அனைவரும் பாதுகாக்கப்பட மனிதாபிமானத்துடன் செபிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் இத்தொற்று நோய் அதிகரித்து வரும் இக்காலத்தில் அனைவரும் சுகாதார அதிகாரிகளின் விதிமுறைகளை இன்னும் அதிகமாகப் கடைப்பிடித்து கைகளைக் கழுவி சமூக இடைவெளியைப் பேணி அவசர தேவையற்று வீடுகளை விட்டு வெளிவரது இருக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
இந்த இக்கட்டான வேளையிலும் இறை நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உலகம் முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் என்ற நம்பிக்கையின் இறைவார்த்தைகளை இறையாசீருடன் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics